மிகச் சிறந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம் - இம்தியாஸ் Mp - ALMBNews

Latest

புதிய செய்திகள்

மிகச் சிறந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளோம் - இம்தியாஸ் Mp



நாளை புதன்கிழமை, 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்ற தீர்மானமானது வரலாற்று முக்கியத்துவமும், சமயோசிதமும் மிக்கது என மூத்த அரசியல்வாதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பார்கிர் மார்க்கார் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வெற்றி தோல்வி இறைவனின் ஏற்பாடாகும், பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும நாளைய ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவார் என நம்புகிறேன். நாடு தற்போது கொதி நிலையில் உள்ளது, மக்கள் வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்குப்பட்டுள்ளனர். பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ந்துள்ளது, சர்வதேச சமூகம் எம்மை கைவிட்டுள்ளது. வரலாற்றில் எப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொள்கிறோம். இதிலிருந்து மீளவும், நாட்டை கட்டியெழுப்பவும், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும் அவசியத் தேவை எழுந்துள்ளது. இதன்பொருட்டு நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா மேற்கொண்டுள்ளார். நாட்டின் நலன், நாட்டு மக்களின் மேம்பாடு கருதி இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எமது கட்சியிடம் சிறந்த கொள்கையும், நாட்டை வழிநடத்துவதற்கான தகுதியும், அதற்கான சிறந்த அணியும் உள்ளது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் நாங்கள் சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டு அதிசிறந்த யோசனைகளை பெற்றுள்ளோம். மக்களின் பொருளாதார துன்பங்களை போக்க ஒரு அணியாக தற்போது இணைந்துள்ளோம், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலரும் டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்க ஆதரவளிப்பார்கள். அவர் இனவாதத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே கையில் எடுக்காதவர். மாற்று சக்திகளிடம் இருந்து பணம் பெறும் கைக்கூலிகள் சில அவர் பற்றிய இனவாத பிம்பத்தை வெளிக்காட்ட சமூக ஊடகங்களை தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய பேச்சுக்களில் பல்வேறு முகங்களைக் கொண்ட அரசியல் சக்திகளுடன் பேசினோம். அவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். எனினும் நாட்டை மீட்டெடுக்கும் விடயத்திலும், மக்களுடைய அவசரத் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விடயத்திலும் பொது இணகப்பாட்டுக்கு வந்துள்ளோம். நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளும், மக்களுடைய துயர்துடைக்க விரும்பும் அரசியல்வாதிகளும் நாளை சிறந்த தீர்மானத்தை மேற்கொள்வார்கள். அந்தத் தீர்மானமானது டளஸ் அழகப்பெரும ஜனாதிபதியாகுவதாக அமையும். அதனையே நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.