2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைகளை நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார்.
பதில் ஜனாதிபதி ரணில், பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் பயன்படுத்தி நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முயல்வதாகவும் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (19) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அருட்தந்தை தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க ஸ்கொட்ன்ட் யார்ட், இன்டர்போல் மற்றும் ஏனைய உலகளாவிய சட்ட அமுலாக்க நிறுவனங்களின் உதவியை இலங்கை அதிகாரிகள் நாடியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சுதந்திரமான விசாரணைக்கு சர்வதேசத்தின் உதவியை பெறுவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலதாமதம் செய்ததாகவும் அவரின் அறிக்கைகளை நம்பவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது என்றும் கூறினார்.
இவ்வாறான கருத்துக்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களையும் நீதியை நாடுபவர்களையும் அவமதிக்கும் செயலாகும் என்றும் குறிப்பிட்டார்.