ஜனாதிபதி தயங்கினால் அவரைப் பதவி விலக்க, எங்களுக்கு வழி தெரியும் - ALMBNews

Latest

புதிய செய்திகள்

ஜனாதிபதி தயங்கினால் அவரைப் பதவி விலக்க, எங்களுக்கு வழி தெரியும்

 

நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வகட்சி அரசாங்கமொன்றுக்கு ஜனாதிபதி இணங்காது போனால் அவரை பதவி விலக்குவோம் என்று விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நெருக்கடியான காலகட்டமொன்றில் நாட்டை எவ்வாறு வழிநடத்துவது என்பதை கோட்டாபயவோ, ரணில் விக்ரமசிங்கவோ அறிந்திருக்கவில்லை.

நெருக்கடி காலகட்டத்தில் சாதாரண காலங்களைப் போன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நெருக்கடியை தணிப்பதற்கு வழக்கத்துக்கு மாறான சில நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்.

அதே போன்று தற்போதைக்கு மக்கள் எதிர்நோக்கும் எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு சரியான தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது.

ஆனால் ரஷ்யாவின் உதவியுடன் அதற்கு விரைவில் நாங்கள் தீர்வு வழங்குவோம். எரிவாயு மற்றும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

அதன் பெறுபேறுகள் விரைவில் தெரிய வரும். நாட்டின் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வ கட்சி அரசாங்கமொன்று அமைவதே பொருத்தமாக இருக்கும்.

அதனை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி தயங்கும் பட்சத்தில் அவரைப் பதவி விலக்கவும் எங்களுக்கு வழி தெரியும். அதனை நாங்கள் மேற்கொள்வோம் என்றும் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.